திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் கடந்த 25ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தவறி விழுந்தது. சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இருப்பினும் மீட்புக் குழுவினர் சுஜித்தை மீட்கத் தொடர்ந்து போராடினர். 80 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து நடைபெற்றுவந்த மீட்புப் போராட்டத்தில் 88அடி ஆழத்திலிருந்து சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுவருகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள நாகராஜ் என்பவர் எலக்ட்ரிக்கல், பிவிசி பைப் விற்பனை கடை நடத்திவருகிறார். இவர் பயனற்ற நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடிவருகிறார்.
இதுகுறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது தொடர்பு எண்ணுடன் பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த தகவலையடுத்து, இன்று மட்டும் 20-க்கும் மேற்பட்ட விவசாயி நிலங்களில் உள்ள பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை தனது சொந்த செலவில், பிவிசி மூடிகள் கொண்டு மூடியுள்ளார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற பணியை மேற்கொண்டுள்ளதாகவும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மூடியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்று தணியும் இந்த ஆழ்துளை சோகம்? - சுஜித் தந்த பாடம் என்ன?