ஈரோடு அருகேயுள்ள கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாம் பிரைட். இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். தனது பணியின் காரணமாக மருத்துவர்களை நாள்தோறும் சந்தித்து மருந்துகளை பரிந்துரை செய்யக் கேட்டு மருத்துவமனைக்கு சென்று வரும் இவர் ஈரோடு பெருந்துறை சாலைப் பகுதியிலுள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் அர்ச்சனா என்பவரை கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனாவும், சாம் பிரைட்டைக் காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சாம்பிரைட் அர்ச்சனாவை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ச்சனா, தனக்கு கேரளாவில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், இனிமேல் தன்னைத் தேடி வரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட சாம்பிரைட், தனது காதல் தோல்வியடைந்த வருத்தம் காரணமாக நேற்றிரவு தனது அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் தனது மகன் அறை கதவை தட்டியும் திறக்காதது கண்டு அவரது தந்தை சாம்சன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சாம்பிரைட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஈரோடு தெற்கு காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காதல் தோல்வி காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.