கோவை, நீலகிரி சுற்று வட்டார மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், பில்லூர் அணை நிரம்பியுள்ளது. பில்லூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் பவானிசாகர் அணையில் கலப்பதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அதன் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணை ஓரிரு நாள்களில் நிரம்ப வாய்ப்புள்ளது. அணை நிரம்பும் பட்சத்தில் அணையிலிருந்து உபரி நீர், பவானி ஆறு வழியாக வெளியேற்றப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையோரம் உள்ள முள்செடிகளை அகற்றவும், கரைகளைத் தூர்வாரி பலப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படி, கரையை உயர்த்துவதன் மூலம் வெள்ளநீர் தாழ்வான பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுவதற்கு வாய்ப்பு தடுக்கப்படும்.
தொடர்ந்து 24 மணி நேரமும் பொக்லைன் ஜேசிபி இயந்திரம் மூலம் கரையைப் பலப்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு!