ஈரோடு மாவட்டம் பவானிசாகருக்கும், கல்லாம்பாளையத்துக்கும் இடையே மாயாறு பாய்கிறது. கனமழையின் காரணத்தால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பரிசல் இயக்கக்கூட முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பவானிசாகர் வனப்பகுதியில் கல்லாம்பாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி நீலியம்மாள்(50) உடல் நலக்குறைவால் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்லாம்பாளையம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதற்கிடையில், மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக கல்லம்பாளையத்திற்கு ஆம்புலனஸ் செல்ல முடியாத நிலை உருவானது. இதனால் ஆற்றின் கரையிலே பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..
இந்நிலையில், மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பரிசல் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது. சடலத்தை பெண்ணின் பிறந்த ஊராகன கல்லாம்பாளையத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது பழங்குடியினரின் பாரம்பரியம் என்பதால், சடலத்தை ஆற்றை தாண்டி எடுத்து செல்ல தயாரானார்கள். இதனால் நீலியம்மாளின் உடலை மரக்கட்டையால் கட்டி அதை மாயாற்றில் இழுத்து சென்றனர். அதிவேகமாக செல்லும் மாயாற்றில் மிகவும் ஆபத்தான முறையில் சடலத்தை கட்டி உறவினர்கள் இழுத்து செல்லும் வீடியோ காட்சி மனதை பதறவைத்துள்ளது. மேலும், மாயாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.