ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனஉயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வனஉயிரின பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்பூங்காவில் பார்வையாளர்களைக் கவர்வதற்காக அழகிய பூஞ்செடிகள், யானை சறுக்கு, இளைப்பாறும் குடிகள் போன்ற பொழுபோக்கு அம்சங்கள் உள்ளன. புலிகள் காப்பகத்தில் யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் போன்ற உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், பண்ணாரி வனத்தில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று கம்பி வேலியைச் சேதப்படுத்திவிட்டு பூங்காவில் நுழைந்தது.
மேலும் அந்த காட்டு யானை பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த யானை போன்ற பொம்மையின் தும்பிக்கையை உடைத்து தூக்கி வீசியது. அதனைத் தொடந்து மான், பறவைகள் போன்று அமைக்கப்பட்டிருந்த பொம்மைகளையும் துவம்சம் செய்தது.
இத்தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டியடித்தனர். யானை புகுந்து சேதப்படுத்திய சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் பூங்காவின் முகப்புப் பகுதி பொலிவிழந்து காணப்படுவதாக பொது மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய குடும்பம்: குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்