சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில தினங்களாக யானைகள் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (மே.14) காலை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்தன. பகல் நேரத்தில் யானைகள் விளை நிலத்தில் சுற்றித் திரிவதைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் விளை நிலத்தையே சுற்றி திரிந்த யானைகள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
பகல் நேரங்களில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் நடமாடுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்பவர்கள், விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் இலவச ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் சாத்தூரில் தொடக்கம்!