ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கரும்புகள் ஏற்றிவரும் லாரிகள் இந்த தடுப்புக்கம்பி பகுதியில் நுழையும்போது கரும்புத்துண்டுகள் சிதறி கீழே விழுகின்றன. இவை அப்பகுதியில் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. கரும்பின் சுவையறிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி சோதனைச்சாவடிக்கு வந்து கரும்புகளை சுவைக்கின்றன.
இந்நிலையில் இன்று மதியம் வனத்தை விட்டு வந்த 2 காட்டு யானைகள் சோதனைச்சாவடி அருகே வந்து கரும்புகளைத் தின்றன. இதைக்கண்ட வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயற்சித்தனர். இருப்பினும் யானைகள் கரும்பை தின்பதில் ஆர்வம் காட்டியதோடு நகராமல் நின்றன. நீண்ட போராட்டத்திற்கு பின் யானைகள் அடர்வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. பட்டப்பகலில் யானைகள் சோதனைச்சாவடியில் முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிப் பெண், 8 வயது சிறுவன், கணவர் உட்பட மூவர் கொடூர கொலை - கேள்வி எழுப்பும் இணையவாசிகள்!