ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி விவசாயமான மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
மலைவாழ் மக்களின் வருவாய் மற்றும் கால்நடைத் தீவனமாக மக்காச்சோளம் பயிர் உள்ளது. தற்போது மக்காச்சோளம் பால்பிடித்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருப்பதால் யானை, காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் புகுந்து சேதப்படுத்திவருகின்றன. இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டு காட்டுப்பன்றி, யானைகளை விவசாயிகள் விரட்டிவருகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் மலைப் பகுதியையொட்டியுள்ள சுஜில்கரை கிராமத்தில் மக்காச்சோளம் காட்டில், வனத்திலிருந்து கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச் சோளப்பயிரை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது.
இங்குள்ள 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததால் அதன் மதிப்பு மூன்று லட்சத்தை தாண்டும் என்றும், வனத் துறை இழப்பீடு தர வேண்டும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
தொடர்ந்து காட்டுப் பன்றிகளால் பாதிப்பு ஏற்படும்போது விவசாயிகள் பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத் துறை அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.