ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகேயுள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பூபதி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இதுவரை குழந்தை இல்லை.
இந்நிலையில் பூபதி தினமும் மது அருந்தி வந்ததால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கார்த்திகா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தனது உடல் மீது மண்ணெண்ணயை ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
பின் கார்த்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், பலத்த தீ காயங்களுடன் அவரை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே இருவருக்கும் திருமணம் நடைபெற்று 6 ஆண்டுக்குள், மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளதால் ஈரோடு மாஜிஸ்திரேட் நேரில் வந்து கார்த்திகாவிடம் விசாரணை மேற்கொண்டார்.
மனைவி தீக்குளித்து 60% தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதைத் தாமதமாக அறிந்த பூபதி அரசு மருத்துவமனைக்கு வந்து மனைவியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கடும் பயத்துக்குள்ளான பூபதி தனது மனைவியின் தற்கொலைக்கு தாமே காரணமாகி விட்டதையும், தனது மேல் காவல் துறை நடவடிக்கை பாய வாய்ப்பிருப்பதையும் உணர்ந்து அரசு மருத்துவமனையிலுள்ள கழிவறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சையளித்தும், பூபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.