ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
இதையடுத்துசெய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், "இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருகின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாகதான் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோன்று, தேர்தல் ஆணையம் உரிய முறையில் சோதனை நடத்தி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.
துரைமுருகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் அடிப்படையில் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நீட் தேர்வுக்கு விலக்கு வாக்குறுதி சாத்தியமற்றது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மீதும், நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதும் மக்களுக்கு எவ்வித ஈர்ப்பும் கிடையாது
வைரமுத்து, கனிமொழி, வீரமணி உள்ளிட்டோர் தொடர்ந்து இந்து மத கடவுள்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்துக்களுக்கு எதிரானது என்று தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் இவற்றுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?
இவற்றையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் செயல்படுகிறார்" என விமர்சித்துள்ளார்.