நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்தது. கடந்த அக்.14ம் தேதி 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் அணையின் அதிகபட்ச நீர் மட்டமான 105 அடியில் கடந்த 22ம் தேதி 102 அடியை எட்டியது.
அணை பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் உபரி நீர் பவானிஆற்றில் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப நீர் வெளியேற்றம் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையிலிருந்து வெள்ளநீர் திறந்துவிடப்பட்டதால் உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை!
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து 8451 கனஅடியிலிருந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கடந்த 22ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாள்களாக அணையின் நீர் மட்டம் 102 அடியாகவும் அணை நீர் இருப்பு 30.3 டிஎம்சியாகவும் உள்ளது.
1948 ஆண்டு துவங்கிய பவானிசாகர் அணை கட்டுமான பணி 1955 ம் நிறைவடைந்தது. அணையின் முழுகொள்ளளவான 105 அடியை 18 வது முறையாக தற்போது எட்டியுள்ளது. ''கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 15ம் தேதி அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து 26 டிஎம்சி உபரிநீர் தொடர்ந்து 30 நாள்கள் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது'' .
24ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடி, நீர் இருப்பு 30.3 டிஎம்சி, நீர்வரத்து 5086 கனஅடி, உபரி நீர்வெளியேற்றம் 5000 கனஅடியாக உள்ளது.
இதையும் படிக்க: கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கத் தடை!