ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மத்தியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வாய்க்காலில் உள்ள கரைகளைத் தொட்டபடி நீர் கரைபுரண்டு சென்றது, வாய்காலின் கரைகள் மண்ணினால் கட்டப்பட்டுள்ளது. வாய்காலின் கரைகளை தொட்டபடி நீர் வேகமாக சென்றதால் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு உடைப்பும் ஏற்பட்டது.
இதனையடுத்து வாய்க்கால் நீர் இடது கரையிலிருந்து விவசாய நிலத்துக்குள் புகுந்து கேத்தம்பாளையம் காலணி குடியிருப்பு வழியாகச் சாலையைக் கடந்து சென்றது. இதனால் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வாழை,கரும்பு, நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வாய்க்கால் நீரால் கிராம மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தற்போது மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உக்கரம், கேத்தம்பாளையம், மில்மேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்