ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஜனவரி 7ஆம் தேதிமுதல் கீழ்பவானி வாய்க்கால் புன்செய் பாசனத்திற்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி பாசன பகுதி உழவர்கள் நிலக்கடலை, எள், சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 7ஆம் தேதிமுதல் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஐந்து சுற்றுகளாகத் தண்ணீர் திறக்கப்படும் எனப் பொதுப்பணித் துறையினர் அறிவித்த நிலையில், தற்போது கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2300 கனஅடி வீதம் நான்காம் சுற்றுக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது.
ஐந்தாம் சுற்று தண்ணீர் பத்து நாள்கள் கழித்து திறக்கப்படும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 89.93 அடியாகவும், நீர் இருப்பு 21.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1223 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: பதிவானதைவிட கூடுதலாக 50 வாக்குகள் - நள்ளிரவில் நாதக போராட்டம்