ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த வினோபா நகரில் 100க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் உள்ளன. விளாம்கோம்பை வனத்தையொட்டி இக்கிராமம் அமைந்துள்ளதால், இங்கு செல்போன் டவர் எதுவும் இல்லை. இதனால் அருகாமையில் உள்ள வாணிப்புத்தூர் செல்போன் டவரில் விட்டுவிட்டு கிடைக்கும் சிக்னலை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர்.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலானோரின் வீடுகளில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் பயன்பாட்டில் இல்லாத மொட்டை மாடியைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர்.
மேலும், இம்மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் படிப்பதால் இந்த சிக்னலும் தடைபடுகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கையில் சிக்னல் கிடைக்காமல் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களும் தாங்களும் பயன்பெறும் வகையில் புதிதாக செல்போன் டவர் அமைத்துக் கொடுத்து மாணவர்கள் கல்வி கற்க உதவ வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்'