ஈரோடு மாவட்டம் பவானி சாலை அசோகபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல் அனுப்பி வைப்பது, உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கான கூலி வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் உள்ள தனி அலுவலர்கள் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், இடமாறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த அலுவலகத்தில்தான் கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றுபவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.உதவி இயக்குநர் ஸ்ரீதரன் சென்னையில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். சோதனையின்போது, ஊழியர்கள் உள்ளிட்ட யாரும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இரவு வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 18.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.