ஈரோடு பவானி சாலையில் கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு இலவச வேஷ்டி, சேலை தயாரிப்பது தொடர்பான ஆர்டர்கள் இங்கிருந்து வழங்கப்படும். இந்த சங்கங்களுக்கு அரசின் மானிய தொகையை வழங்குவதற்காக கூட்டுறவு சங்கங்களிடம் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாகப் புகார் எழுந்தது.
தீபாவளியின் போதும் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று மாலை இந்த அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விடியவிடிய இந்த சோதனை நடைபெற்று இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்றது. நேற்று ரூ. 18 லட்சம் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ. 13 லட்சம் சிக்கியிருக்கிறது. மொத்தம் இதுவரை 31 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
அலுவலகத்தில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்கம், ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சமேளன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், துணி நூல் கட்டுபாட்டு அலுவலர் பழனிகுமார், கைத்தறி அலுவலர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் அலுவலக மேலாளர் ஜோதி, அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்க கணக்காளர் செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கைத்தறித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரூ. 18.50 லட்சம் பறிமுதல்