தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையானது சத்தியமங்கலம் வழியாக இரு மாநிலத்தை இணைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது.
இச்சாலை வழியாக இரு மாநிலங்களிடையே சரக்கு லாரி போக்குவரத்து 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. குறிப்பாக, அதிக பாரம் கொண்டுசெல்லும் லாரிகளை சத்தியமங்கலம் போக்குவரத்துக் காவல் துறையினர் கண்டறிந்து அதனை வழிமறித்து ஓட்டுநர்களிடம் கட்டாயமாக லஞ்சம் வசூல் செய்வதாக புகார் எழுந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று, சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அருகே சாலையில் சென்ற சரக்கு லாரியை போக்குவரத்துக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஜீப்பில் அமர்ந்தபடி லாரி ஓட்டுநரை வரவழைத்துப் பேசிவிட்டு லாரியின் மறைவான பகுதியில் சென்று பணம் பெற்றுக்கொண்டு லாரியை விடுவிக்கின்றனர். இந்தக் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வழக்குகள் பதிவுசெய்யாமல் விடுவிக்கும் சத்தியமங்கலம் போக்குவரத்துக் காவல் துறையினர் மீது மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.