ஈரோடு: வ.உ.சி. திடலில் இயங்கி வரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் காய்கறி, பழங்கள் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சந்தையில் சுங்கம் வசூல் செய்யும் குத்தகைதாரர் இரு மடங்கு கட்டணம் வசூலித்து வந்ததால், ஜூலை 5ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் விதித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், சுங்கம் வசூலிக்க உரிய ரசீது இருந்தால் மட்டுமே வியாபாரிகள் சுங்க கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
குத்தகைதாரர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில், தற்போது குத்தகைதாரர் சந்தைக்குள் வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால், வியாபாரிகளும், சுமைதூக்கும் தொழிலாளர்களும், சரக்கு வாகன ஓட்டுநர்களும் மிகுந்த அதிருப்திக்குள்ளாகினர்.
இதையடுத்து, சுங்க குத்தகைதாரர்களை கண்டித்து 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஈரோடு வடக்கு காவல் துறையினர், டவுன் டிஎஸ்பி ராஜூ, மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கை மனு அளிக்க முடிவு:
அப்போது பேசிய அலுவலர்கள், “உங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளியுங்கள். அந்தக் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'உர விலையை ஒன்றிய அரசே நிர்ணயிக்க வேண்டும்'