அரக்கோணம் தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி பகுதி அந்தியூர் பிரிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு இளைஞர்களின் படுகொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய கூறியும், தமிழ்நாட்டில் பாமக கட்சியை தடை செய்யக் கோரியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பாமக, அதிமுக வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நாகர்கோவில் அடுத்த துவரங்காடு சந்திப்பில் குமரி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொலை செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் நீதி வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க:
'அரக்கோணம் ரெட்டை கொலைக்கு பாமக கண்டன அறிக்கை விடலயே' - திருமாவளவன் கேள்வி