ஈரோடு: இந்து முன்னணி சார்பில் சென்னிமலைசுப்பிரமணிய சுவாமி கோயில் இருந்து பனிமலை கோயில் வரை வேல் யாத்திரை கொண்டு செல்லும் வகையில் வேல் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள், திரைப்பட நடிகர் ரஞ்சித் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இது குறித்து நடிகர் ரஞ்சித பேசுகையில் “ சென்னி மலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. சென்னி மலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.
ஆங்கில புத்தாண்டு ஒன்றும் நமது கலாச்சாரம் இல்லை அதற்காகப் புத்தாண்டை எதிர்க்கவில்லை. இந்த புத்தாண்டினை சென்னி மலை முருகன் கோயிலில் தொடங்கியுள்ளோம். 2024 ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடர் இல்லாத புதிய ஆண்டாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதிகள் தான். அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசமாக வரவேற்க வேண்டும்.
இயற்கை போரிடர் காலங்களில் தமிழ்நாடு அரசை விடத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்த உதவிகள் வியக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்கள் 50 ஆண்டுகாலமாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள், ஊழல் லட்சம் போன்ற விஷயங்களில் நாடு தலைவிரித்தாடுகிறது.
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலம் முதல் ஆயிரக் கணக்கான நடிகர்கள் நடித்துள்ளனர். இதில், விஜயகாந்த் செய்த செயல்களால் தனித்து நிற்கிறார். நடிகர் விஜயகாந்த் காலமானதிற்கு நடிகர் வடிவேலு நேரில் அஞ்சலி செலுத்தா விட்டாலும் ஒரு வீடியோ வாயிலாக இரங்கல் அறிக்கை விட்டு இருக்க வேண்டும். அவர்களுக்குள் என்ன மனக் கசப்பு என தெரியவில்லை.
ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வர வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு அமர்ந்து விடுவார்கள். பின்னர், நாடு நைஜீரியா போன்று மனிதனை மனிதன் வேட்டையாடும் சூழல் ஏற்படும்” என இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: “பதவியில் இருந்தால் அமைச்சரை உள்ளே வைத்து இருப்பேன்” -பொன் மாணிக்கவேல்