ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது, நேற்று (ஜூன் 13) ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும் இல்லங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். வெள்ளாங்கோவில், குள்ளம்பாளையம், அளுக்குளி, கவுந்தப்பாடி, ஓடத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நாளாக இன்று (ஜூன் 14) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.
இந்த முகாமில் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரத்திலுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திவருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோர் காலை 8 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.