ஈரோடு : தமிழகத்தில் பிரபல தனியார் ஆயில் நிறுவனம், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சூர்யகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், உள்ளிட்ட எண்ணெய் வகைகளை இந்தியா மட்டுமில்லாமல் வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறது.
தனியார் ஆயில் நிறுவனத்தின் சூர்யகாந்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலையானது ஈரோடு அடுத்த மூலக்கரைப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றி விவசாய விளைநிலங்களும், சுமார் 5க்கும் மேற்பட்ட கிராமங்களும், பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் ஆலைக்கழிவுகள் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் ஆலையின் பின்புற பகுதியில் ஆலைக்கு சொந்தமான இடத்தில் விடப்படுவதாக கூறப்படுகிறது. சுத்திகரிப்புச் செய்யமால் கழிவுகளை வெளியேற்றுவதால் ஆலையை ஒட்டி உள்ள இடங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், விவசாய விளைநிலங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி நிலங்களில் எந்த பயிரும் விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீரிலும், ஆலைக்கழிவு கலந்து மாசு நீர் வருவதால் பொது மக்களுக்கு கேன்சர், இருதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த ஆலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆலையைச் சுற்றி உள்ள 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குடிநீரை ஆய்வு செய்து சோதனைக்கு அனுப்பி பார்த்த பொழுது அதில் டிடிஎஸ் தன்மை அதிகமாக உள்ளதால் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் ஆத்திரம்.. ஓடும் ரயிலில் சகோதரனை குத்திக் கொன்ற கொடூரம்! பட்டப்பகலில் துணிகரம்!