ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால், வயலில் நெற்கதிர்கள் முளைத்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீரை பயன்படுத்தி பவானிசாகர், சத்தியமங்கலம், செண்பகபுதூர், பெரியூர், உக்கரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாரானது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி தொடர்மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரில், நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்துவிட்டதால் நெற்கதிர்கள் வயலில் முளைத்து வீணாகியுள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஒரு ஏக்கர் நெல் பயிரிட ரூபாய் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய்வரை செலவாகியுள்ள நிலையில் நெல் பயிர் சாய்ந்து முளைத்துவிட்டதால் சாகுபடி செய்த செலவினத்தை ஈடுகட்ட முடியாமல் தவிப்பதோடு வங்கியில் வாங்கிய விவசாய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் திணறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் இந்தச் சூழ்நிலையை கருத்தில்கொண்டு உடனடியாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இப்பகுதியில் தற்போது நெல் அறுவடை தொடங்கப்பட உள்ளதால் சத்தியமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து அரசு நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்