மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை வேகப்படுத்தியுள்ளன. அந்த வகையில், திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு முறையும் பேப்பரில் எழுதி வைத்திருந்ததை பார்த்து பார்த்து படித்தார். அதன் உச்சக்கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடக்க இருக்கும் தேதியான ஏப்ரல் 18ஆம் தேதியையும் அவர் கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்து படித்தார்.
தற்போது உதயநிதியின் இந்த பரப்புரை வீடியோவை சமூக வலைதளவாசிகள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மூன்றாம் கலைஞர் என திமுகவினரால் பட்டம் பெற்றிருப்பவருக்கு தேர்தல் தேதி கூடவா தெரியாது என பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி தேர்தல் பரப்புரையின்போது, “2004ஆம் ஆண்டு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது” என உதயநிதி பேசியதும் அதனை வலைதளவாசிகள் கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.