ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், லோகநாதன் மற்றும் அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், முனியப்பன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள்.
இந்த நிலையில், இன்று (ஜன.07) மதியம் நான்கு பேரும் தமிழ்செல்வனின் காரில் அந்தியூர் அருகே அத்தாணியில் உள்ள பவானி ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஸ்ரீராம் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் ஆற்றில் மூழ்கி உள்ளனர்.
இதனைக் கவனித்த அவரது நண்பர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் லோகநாதன் கூச்சலிட்டு உள்ளனர், தொடர்ந்து, சம்பவம் குறித்து அந்தியூர் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 30 நிமிடம் தேடலுக்குப் பிறகு ஸ்ரீராமின் உடலை மட்டும் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து, ஆப்பக்கூடல் போலீசார் ஸ்ரீராமின் உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தேவேந்திரனின் உடல் கிடைக்காத நிலையில் அவரது உடலைத் தீவிரமாகத் தேடும் பணியில் தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த ஸ்ரீராம் ஜேசிபி ஓட்டுநராகவும், தேவேந்திரன் லாரி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகின்றனர் என்பதும், இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சம்பவம் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பம் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தீர்ப்பை வாசிக்கும்போது நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடிய கைதி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்!