ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெரிய புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தயிர்பாளையம் கிராமப் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர குமார் என்பவருக்குச் சொந்தமான ஏபி புட்ஸ் மஞ்சள் கிடங்கு உள்ளது. இதில், தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான 150டன் எடை மஞ்சள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு சுமார் 2 மணியளவில் இடி தாக்கியதில் மஞ்சள் கிடங்கு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுதொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு பெருந்துறை, கோபி, பவானி ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 10 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் மஞ்சள் அரைக்கும்போது ஏற்படும் கழிவுகள் சுமார் 50 டன் அளவில் சேதமடைந்துள்ளதாகவும், விரைவாக தீயை அணைத்த காரணத்தினால், நல்ல நிலையில் இருந்த மஞ்சள் காப்பாற்றப்பட்டதாகவும் தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில், ஈரோடு மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் புளுகாண்டி, துணை அலுவலர் வெங்கடாஜலம் ஆகியோர் தீயணைப்புப் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கவுந்தப்பாடி காவலர்கள், பவானி வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீயை முழுவதுமாக அணைத்தபின்பே, பாதிப்பு குறித்த முழு விவரமும் தெரியவரும்.
இதையும் படங்க: சூறாவளிக்காற்றால் வாழை மரங்கள் நாசம் - விவசாயிகள் வேதனை