ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு - கர்நாடக இடையே தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்கின்றன.
இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து கோயம்புத்தூருக்கு காகிதம் ஏற்றிச் சென்ற லாரி, திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திம்பம் 6ஆவது வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர், கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர்.
இதன்காரணமாக அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. லாரி விபத்துக்குள்ளான இடத்தில் ஏற்பட்ட சிறிய இடைவெளியில் வேன், கார் போன்ற வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன.
கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. லாரி விபத்துக்குள்ளானதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகனங்கள் பண்ணாரி, ஆசனூரில் அணிவகுத்து நின்றன.