ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள்பட்ட தலமலை வனத்தினுள்ளே பழங்குடியினருக்குச் சொந்தமான உடும்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தலமலை கிராம பழங்குடியின மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 19) வழிபாட்டுக்காக கூட்டமாக உடும்பன் கோயிலுக்குப் புறப்பட்ட மக்களை, தலமலை வனத் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், தலமலை சோதனைச்சாவடி அருகே வந்த அரசுப் பேருந்தைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த தலமலை வனச்சரக அலுவலர் சுரேஷ், ஆசனூர் காவல் துறையினர் பழங்குடியின மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் கரோனா தொற்றுப் பரவல், வனவிலங்குகள் தொந்தரவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு சுழற்சிக்கும் 10 பேர் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு, சிறைப்பிடிக்கப்பட்ட பேருந்தை பழங்குடியின மக்கள் விடுவித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'