ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. வனப்பகுதி முழுவதும் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தடுப்பணைகளும் காய்ந்து வறண்டன.
இந்நிலையில், தாளவாடி, பாரதிபுரம், சேஷன்நகர், சூசைபுரம், ஒசூர், கெட்டவாடி, பனக்கள்ளி, அருள்வாடி, மல்லன்குழி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 15,000 வாழை மரங்கள், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான 2,000 பாக்கு மரங்கள் காற்றில் முறிந்து நாசமாகின. இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இயற்கை சீற்றத்தால் நாசமடைந்த மரங்களுக்கு அரசு இழப்பீடு தர வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.