ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்துவைத்தார். அப்போது கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் தியாகராஜு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் பாராட்டும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பிற்கான 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நீட் தேர்வு பயிற்சி பெற நேற்று வரை 9,842 பேர் பதிவு செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்தாண்டு 5.25 லட்சம் பேர் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை.
அதை முதலமைச்சர்தான் அறிவிப்பார். நீட் தேர்விற்கு வகுப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல்: கவுன்சிலிங் தேதி விரைவில் வெளியாகும்