ஈரோடு மாவட்டம் சத்திமங்கலத்திலுள்ள திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பண்ணாரி அம்மன் கோயில் முதல் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை உள்ள சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பகல், இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஆசனூர் பகுதியில் சாலையின் நடுவே நின்ற ஒற்றை யானை சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் கிளைகளை ஒடித்து தீவனம் உட்கொண்டபடி நகராமல் நின்றது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகரமுடியாமல் வரிசையாக நின்றன. இதனிடையே, வாகன ஓட்டிகள் யானையை வேடிக்கை பார்த்தவாறு செல்போனில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
இதனால் சுமார் அரைமணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனச்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை மிதவேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.