ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலாக்களை நம்பி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேன்களும், வேன்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு கடந்த 4 மாதங்களாக எவ்வித வருவாயுமின்றி சுற்றுலா வேன்கள் நின்று கொண்டிருப்பதாகவும், வருவாயின்றியும், வேறு வருவாய்க்கும் வாய்ப்பில்லாமல் வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய, மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு சுற்றுலா வேன் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கரோனா வைரஸ் காரணமாக வாகனங்கள் ஓடாத காலத்திற்காக காப்பீட்டுத் தேதியை நீட்டித்து வழங்குவதற்கு சிபாரிசு செய்திட வேண்டும், நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராத வட்டியைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும், டீசல் விலை உயர்வை ரத்து செய்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.
மேலும் வாகனங்கள் ஓடாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்திட வேண்டும், புதிய ஸ்பீடு கவர்னர் இல்லாமல் எப்.சி வழங்கிட வேண்டும், இ பாஸ் வழங்கிடும்போது சுற்றுலா வேன்களுக்கு 7 நபர்களுக்கு வழங்கிடாமல் 12 நபர்கள் சென்றிடுவதற்கு அனுமதியளித்து தளர்வு அளித்திட மாநில அரசு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.