பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரீகத்தில் நெல், பருத்தி போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து தமிழர்கள் வாழ்ந்து வந்ததுடன், விவசாயத்துக்கு அடுத்தப்படியாக தட்பவெப்ப நிலை உடலை பாதிக்காத வகையில் பருத்தியிலான ஆடைகளை நெசவு செய்து உடுத்தி வந்தது வரலாற்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் மானம் காக்க ஆடைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவுத் தொழிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் அடுத்த தலைமுறையினர் கைத்தறி நெசவுத்தொழிலை முன்னெடுத்து செல்வார்களா? என்பதும் கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு சேலை, ஆரணி பட்டு சேலை, பவானி குழித்தறி ஜமுக்காலம், சென்னிமலை கைத்தறி போர்வை ரகங்கள் என தமிழர்களின் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலுக்கு என்றும் தனி மவுசு இருந்து வருகிறது. அதனால் நெசவாளர்களின் வாழ்க்கையும் பல ஆண்டுகளாக செழிப்பாக இருந்து வந்தது. நவீன மாற்றத்தின் காரணமாக புதிய புதிய ஆடை ரகங்களை உற்பத்தி செய்ய ஏர் லூம், ஜட் லூம், விசைத்தறி என பல விதமான இயந்திரங்களின் வருகையால் மனித உழைப்பில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கைத்தறி ரகங்களின் விற்பனை அழியும் நிலைக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவுத் தொழிலை காப்பாற்றும் வகையில் 1,137 கூட்டுறவு சங்கங்களின் மூலம் 2.51 லட்சம் நெசவாளர்களுக்கு உற்பத்தியில் மானியம், கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம், மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், கைத்தறி நெசவு மூலமாக உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கோ-ஆப் டெக்ஸ் மூலமாக கொள்முதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறன. இருப்பினும் நவீன ஆடை ரகங்களின் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் ஈடாக கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த முடியவில்லை.
இதனால் நெசவுத்தொழிலாளர்கள் தங்களது அடிப்படை தேவைக்காக கட்டட வேலைக்கும், தொழிற்சாலைகளுக்கும் பணிக்கு செல்கின்றனர். வயது மூப்பு காரணமாக வேறு வழியின்றி சில தொழிலாளர்களே நெசவுத் தொழிலை செய்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரையில் கைத்தறி ரகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கு கூட கைத்தறி ரகங்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே நழிந்து போன நெசவுத் தொழில் இந்த கரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலுமாக முடங்கி விட்டது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் கடும் வேதனையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு கரோனா நிதியாக அறிவித்த ஆயிரம் ரூபாயும் கூட இன்னும் பல நெசவாளர்களுக்கு கிடைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அழிவின் விழும்பில் உள்ள கைத்தறி நெசவுத் தொழிலை மீட்க மத்திய, மாநில அரசுகள் கைத்தறி நெசவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். இப்படி செய்தால் நெசவாளர்களுக்கு அதிகமான வேலை கிடைக்கும், அதேபோல உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும்.
காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நவீன வளர்ச்சி ஒரு புறம் அவசியம் என்றாலும் தற்போது பல்வேறு வகையிலும் பாரம்பரியமான நடைமுறைகளுக்கு தமிழர்கள் திரும்பி வரும் நிலையில், பாரம்பரியமான கைத்தறி நெசவுத் தொழிலையும், நெசவாளர்களையம், பாரம்பரிய கைத்தறி ரகங்களையும் மீட்டு எடுத்து பாதுகாக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கடமையாகும்.
இதையும் படிங்க: நூல் கிடைக்காமல் முடங்கிய நெசவுத்தொழில்: நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறப்பு!