ஈரோட்டில் கடந்த சில வாரங்களாக மழை அதிகளவில் பெய்து நீர் நிலைகளில் வழக்கத்தைவிடவும் தண்ணீர் அதிகளவில் சென்று வருகிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு சாயத்தொழிற்சாலையினர் தங்களது தொழிற்சாலை சாயக்கழிவு நீரை இரவோடு இரவாக நீர் நிலைகளில் கலந்து வருவதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு அருகேயுள்ள பிச்சைக்காரன்பள்ளத்தில் மழைநீருடன் அதிகளவிலான சாயக்கழிவு நீர் கலந்து செல்வதாக அப்பகுதி மக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பிச்சைக்காரன்பள்ளம் பகுதிக்கு சென்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தண்ணீரைப் பரிசோதித்தனர்.
மேலும் சாயக்கழிவு நீர் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நீரை மாதிரிக்கு எடுத்து பரிசோதனைக்காக கோயம்புத்தூர் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்புவதற்கான தண்ணீரை சேகரித்தனர்.
இதனிடையே மாதிரிக்கு எடுக்கப்பட்ட தண்ணீரில் பரிசோதனை முடிவில், சாயக்கழிவு நீர் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் நீர் நிலைப்பகுதியிலுள்ள சாயத்தொழிற்சாலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாசுக்கட்டுப்பாடு அலுலர்கள் தொழிற்சாலையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.