ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நகரவை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விலையில்லா மடிக்கணினிகளை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வழங்கினார்.
கோபிசெட்டிபாளையத்தில், அரசு உதவி பெறும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மடிக்கணினி வழங்கும் விழாவிற்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, 2017-18ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியின் வாயிலில் முற்றுகையிட்டனர். தங்களுக்கு இன்னும் மடிகணினிகள் வழங்கவில்லை எனவும் உடனடியாக தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை மனுவை அமைச்சர் செங்கோட்டையனிடம் அளித்தனர்.
மாணவிகளிடம் இருந்து மனுவை பெற்று கொண்ட அமைச்சர் , "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தினால் பாடம் கற்க மடிகணினி அவசியமாக தேவைப்படுவதால் அவர்களுக்கு வழங்கி வருகிறோம் , அதன் பிறகு 12ஆம் வகுப்பு முடித்துச்சென்றுள்ள உங்களுக்கும் வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்ததுள்ளார். அனைவருக்கும் மடிக்கணினிகள் நிச்சயம் வழங்கப்படும் என்றும் மடிக்கணினிகள் வழங்காமல் நான் மறுபடியும் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வரமுடியுமா என்றும் கேள்வி எழுப்பி மாணவிகளை சமாதானப்படுத்தினார்.”