ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த காராப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது, 'நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் திறந்தவுடனே நான்குப் பள்ளிகள் மூடப்பட்டதாக வந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒருபோதும் அரசுப் பள்ளிகள் மூடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் இரண்டு, மூன்று மாணவர்கள் உள்ள பள்ளியை மூடுவதற்கு கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூடாமல் தொடர்ந்து நடத்துவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளது என ஆய்வு செய்துவருகிறோம்.
தமிழ்நாட்டில் 412 மையங்களில் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்து நீட்தேர்விற்கான பயிற்சியை பெறுகிறார்கள்.
மேலும் மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை மாற்ற இரண்டு ஆண்டு காலம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எட்டு மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து சாதனை படைத்துள்ளோம்.
இந்தப் புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஜூலை மாதம் இறுதிக்குள் ஏழாயிரம் அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும்' என்றார்.