12 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய மூன்று தெலங்கானா தம்பதியினர் - காவல் துறை சுற்றிவளைப்பு! - handcuffed
தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதியர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 40 சவரன் நகை, ரூ.75,000 ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உள்பட்ட மூலப்பாளையம், ரங்கம்பாளையம், கே.கே.நகர், திண்டல், ரகுபதி நாயக்கன்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில், ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. இதன்பேரில், ஈரோடு டவுன் - சப் டிவிஷனுக்கு உள்பட்டப் பகுதியில் பகல், இரவு ரோந்துப் பணியினை தீவிரப்படுத்தி, சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு தாலுகா போலீசார் இரவு நேர ரோந்தின்போது ரங்கம்பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த நபர் முன்னுக்குப் பின்னாக முரணான பதில்களை அளித்துள்ளார். எனவே, அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதன்பேரில் அவர், தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை பகலில் நோட்டம் விட்டு, இரவில் கொள்ளையடிப்பதை சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் அளித்த தகவலின்பேரில், இளைஞர் சூர்யாவுடன் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது மனைவி பாரதி, அதே தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த மணி, அவரது மனைவி மீனா மற்றும் விஜய், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை இன்று (மே 25) போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடமிருந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.75,000 ரொக்கத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் கூறுகையில், “ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 7 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதியர்களை கைது செய்துள்ளோம். இவர்கள் பகலில் ஒவ்வொரு பகுதியாக வியாபாரிகள் போலவும், பிச்சை கேட்பது போலவும் நடமாடி பூட்டிய வீடுகளை நோட்டமிடுவர்.
பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாதபோது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்கள் மேல் சந்தேகம் வராமல் இருக்க அவர்களது குழந்தைகளுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 40 வழக்குகளுக்கும் மேல் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் இதேபோல் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக 30 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களைத் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோட்டில் தான் கைது செய்துள்ளோம். இவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ராயல் என்ஃபீல்டு புல்லட் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு