ஈரோடு: அந்தியூர் 5-வது வார்டு நாட்ராயன் நகரில் செங்காட்டுக் குட்டை உள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் பிடிக்கச்செல்வது வழக்கம். இந்நிலையில், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சிபினேஷன் (11), ராகவன் (10) மற்றும் நந்தகிஷோர் (10) ஆகியோர் நேற்று(அக்-10) மாலை மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் தவிட்டுப்பாளையம் காமராஜ் நகர் அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். குட்டைக்கு மீன் பிடித்து விளையாடச்சென்ற சிறுவர்கள் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூவரையும் தேடிப் பார்த்தபோது குட்டையில் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது.
அந்தியூர் பேரூராட்சித்தலைவர் எம்.பாண்டியம்மாள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டர். அதனைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் மூவரையும் மீட்டு பொதுமக்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு வந்தபோது மருத்துவப்பரிசோதனையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இத்தகவல் பரவியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதோடு, மூவரையும் பார்த்து கதறி அழுதனர். நீண்ட நாள்களாக பயன்பாடின்றி கிடந்த குவாரியில் உள்ள குட்டை என்றும்; ஆழம் தெரியாமல் இறங்கியதில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அந்தியூர் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:7 வயது சிறுமியைப்பாலியல் வன்புணர்வுசெய்து கொன்ற 19 வயது இளைஞர்!