ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே வெங்க நாயக்கன்பாளையம் கல்ராமணி குட்டை உள்ளது. இந்த பகுதிகளில் நேற்று (நவம்பர் 5) பெய்த பலத்த மழை காரணமாக, கல்ராமணி குட்டையில் நீர் தேங்கியது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த குட்டையில் நீர் தேங்கியுள்ளதால், வெங்க நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் குட்டையில் குளித்து விளையாடினர்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதையறிந்த கிராமமக்கள், சிறுவர்களை தேடியபோது மெளலீஸ்வரன், திலீப்குமார் என்ற இருவரின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள், மாயமான ஜீவானந்தம் என்ற சிறுவனை சடலமாக கண்டெடுத்தனர். இதையடுத்து, உயிரிழந்த மூவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட புன்செய் புளியம்பட்டி காவல்துறையினர், வெங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் மௌலீஸ்வரன்(13), ரெங்கநாதன் மகன் திலீப்குமார்(12) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பும், புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்த ஜீவானந்தன்(14) 9ஆம் வகுப்பும் படித்து வந்தது தெரியவந்தது.