ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதி குமாரவலசை சேர்ந்தவர் ராவுத்குமார் (29). இவரது மனைவி திவ்யபாரதி (24). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (மே.21) திவ்யபாரதி வீட்டு படுக்கையில் உடல், முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து திவ்ய பாரதியின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழ்ந்த உயிரிழப்பு குறித்து ராவுத்குமார், அவரது பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மூவரும் சேர்ந்து திவ்யபாரதியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், “திருமணத்துக்கு முன்னர் திவ்யபாரதி பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். ராவுத் குமார் கோயம்புத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கரோனா காரணமாக ராவுத் குமார் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் கணவன் உள்பட அவரது பெற்றோரையும் திவ்யபாரதி தரக்குறைவாகப் பேசியுள்ளார். தனது குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த மூவரும் திவ்ய பாரதியை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி திவ்யபாரதியின் தலையில் ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். பின்னர் தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர்” என்றனர். இதையடுத்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : மூன்று லட்சத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!