ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது, சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். 1993ஆம் ஆண்டு பெருந்துறை அருகே உள்ள பல்வேறு கிராமங்களின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைக்கப்பட்டு, தற்போது இந்த சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்ட காலகட்டத்தில் 1996ஆம் ஆண்டு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில், 200 தொழில் கூடங்கள் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஒவ்வொரு தொழில் கூடங்களும் 4000 சதுர அடி பரப்பளவில் தனி மின்சார வசதி, தனி கழிப்பறை, சாலை வசதி என அனைத்து விதமான அடிப்படை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்பாக 16 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டாலும் தற்போது வளர்ந்துள்ள பொருளாதார வளர்ச்சி, விலைவாசி ஏற்றம், கட்டுமானப்பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிட்டால் தற்போதைய மதிப்பீட்டில், இதே போன்ற கட்டடங்களை அரசே கட்டினாலும் சுமார் குறைந்தபட்சம் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் உதவிகளையும் அனைத்து சமூகத்தினருக்கும் அளித்து வரும் நிலையில், ஆதி திராவிடர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் மேம்படுத்த வேண்டும் என ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக தொழில் கூடங்களை, அரசு கட்டியது. ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரையில் முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்த தொழில் கூடங்களின் கட்டடங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், தொழில் கூடங்களில் உள்ள கதவு, ஜன்னல், மின்விளக்கு, மின்விசிறி ஆகியவையும் திருடு போய் உள்ளன.
மேலும், பயன்படுத்தப்படாத இந்த தொழில் கூடங்களை சமூக விரோத கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத குற்றங்களின் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதி திராவிடர் தொழில் மேம்பாட்டுக்காக கட்டிய இந்த பின்னலாடை தொழில் கூடங்களை, தமிழக அரசு சீர்செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பயிர்களின் நடுவே NLC-யின் கால்வாய் வெட்டும் பணி; கண்ணீரில் விவசாயிகள் - கலெக்டரின் பதில் என்ன?