ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செல்லப்பன்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கேசவன். இவர் பறவை இனங்கள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அரசு அனுமதியளித்துள்ள வெளிநாட்டு பறவைகள், கோழி, புறாக்கள், வாத்துகளை வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணை வீட்டில் பறவைகளைப் பராமரிப்பு செய்து வந்தவர்கள் சொந்த வேலையின் காரணமாக வெளியே சென்றுவிட, இரவு நேரத்தில் பண்ணை வீட்டின் பின்பகுதி வழியாக முகமூடி அணிந்து கையில் பட்டா கத்தி, பறவைகளைக் கொண்டு செல்லும் கூண்டுகளுடன் வந்த இரண்டு கொள்ளையர்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கொண்டைப்புறாக்களையும், நான்கு பெசன்ட் கோழிகளையும், 7 கரலினா வாத்துகளையும், 30 நாட்டுப்புறாக்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
பண்ணை வீட்டின் பராமரிப்பாளர்கள் பறவைகளுக்கு உணவளிக்க வந்து பார்த்தபோது வெளிநாட்டு புறாக்கள், கோழி, வாத்துகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்து பார்த்த உரிமையாளர், வீட்டைச் சுற்றி பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த இருவர், பறவைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபரின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காஞ்சிகோயில் காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து திருடர்களைத் தேடி வந்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவான செல்போன் சிக்னல்களைக் கொண்டு ஆய்வு செய்த தனிப்படை காவல் துறையினர், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் மதுபாலன் ஆகியோரைக் கைது செய்து அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பறவைகளையும் மீட்டனர். மேலும் பறவைகளை திருடிச்செல்ல பயன்படுத்திய கார் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முருகேசன் மீது நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சம்பவத்தில் வெளிநாட்டு பறவைகளை திருடிச்செல்ல இவர்களுக்கு உடந்தையாக யார் இருந்தனர் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் விமானப் பயணம் - பைக்கில் வரும்போது சிக்கிய கொள்ளையர்!