சத்தியமங்கலம், காந்தி நகர் பகுதியில் முருகேசன் என்பவர், கார் பழுது நீக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இன்று காலை முருகேசன் தனது பட்டறையைத் திறக்கச்சென்றபோது, உள்ளே 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டு, அங்கிருந்த காரின் கதவைத் திறக்க முயன்றுள்ளார்.
இதைக்கண்ட முருகேசன் அதிர்ச்சியடைந்து, அருகிலிருந்தவர்களை சத்தம்போட்டு அழைத்துள்ளார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அந்தநபரை கையும் களவுமாக பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் அந்நபரைப் பிடித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் கொண்டப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பதும், பவானிசாகர் அருகேவுள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் கடந்த இரண்டு நாள்களாக பழனிசாமியின் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருந்ததாகவும் அறியமுடிகிறது. பழனிசாமி கார் பழுது நீக்கும் பட்டறைக்கு வரும் முன்னர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்ததாகவும், அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் பழனிசாமியை அடித்து துரத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் தாக்கியதால், காயமடைந்த பழனிசாமியை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் ஊழியரை 'திருடன்' என நினைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆன்லைன் லோன்: திருப்பி செலுத்த முடியாமல் ஐடி ஊழியர் தற்கொலை?