ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி, முல்லை, சம்பங்கிப்பூ சாகுபடி செய்யப்படுகின்றன. சம்பங்கி பூக்களை கொண்டு பூ மாலை, மணமக்கள் திருமண மாலை மற்றும் சுவாமி அலங்கார மாலை போன்றவைகள் செய்தும் தரப்படுகின்றன.
தற்போது முகூர்த்தக் காலம் என்பதால் கடந்த மாதம் கரோனா அச்சுறுத்தலாலும், ஊரடங்கினாலும் ரூ.20க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூவானது, தற்போது கிலோ ரூ.120ஆக விற்கப்படுகிறது. கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வியாபாரிகள் சம்பங்கிப்பூக்கள் வாங்க சத்தியமங்கலம் விரைகின்றனர். இதன் காரணமாக பூவின் விலை உயரத் தொடங்கியுள்ளது.
சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு டன் பூவானது அதிகபட்சமாக கிலோ ரூ.120 வரை ஏலம் போனது. இதனால் சம்பங்கிப்பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு சம்பங்கிப்பூ விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதே விலை நீடித்தால், கடந்த சில மாதங்களில் இழந்த வாழ்வாதாரத்தினை மீண்டும் பெற முடியும் என்றனர்.