ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பீக்கிரிபாளையம் தொட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரிய சடையன் என்பவர் தினமும் தனது மாடுகளை அவிழ்த்துவிட்டு வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலங்களில் மேய்ப்பது வழக்கம்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவர் மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் பொழுது அதில் ஒரு மாடு மட்டும் காணாமல் போனது. இதையடுத்து, பெரிய சடையன், அவரது உறவினரான ஆசனூரைச் சேர்ந்த மாதன் (40) ஆகிய இருவரும் காணாமல்போன மாட்டைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த யானை ஒன்று பெரிய சடையன், மாதன் ஆகிய இருவரையும் பார்த்து ஆத்திரத்துடன் துரத்தியது.
இதில், பெரிய சடையன் யானையிடமிருந்து தப்பி ஓடினார். மாதன் தப்பி ஓடும்போது தவறி கீழே விழுந்தார். அப்போது, துரத்தி வந்த யானை மாதனை காலால் மிதித்து தும்பிக்கையால் தாக்கியது. யானை தாக்கியதில் மாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைக் கண்ட பெரிய சடையன் உடனடியாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட், வனத்துறை ஊழியர்கள் உயிரிழந்த மாதன் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். யானை தாக்கி மாதன் உயிரிழந்த சம்பவம் பீக்கிரிபாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.