ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த ஓசூர் ரோடு தாளவாடியைச் சேர்ந்தவர் செல்லமுத்து(50). இவரது மனைவி மயிலாத்தாள்(40). இந்த தம்பதி 20 வருடங்களாக தாளவாடியில் சுமார் 2 கோடி ரூபாய் அளவில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
தற்போது சரியாக சீட்டை நடத்தாமலும், சீட்டு போட்ட பொதுமக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமலும் சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியூர் சென்றுவிட்டனர். இதற்கிடையே வாடகை வீட்டை காலி செய்ய அந்த தம்பதி வந்துள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், தம்பதியை வீட்டை காலி செய்ய விடாமலும், அவர்களது பொருள்களை எடுத்துச்செல்ல விடாமலும் தடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தம்பதியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், தனக்கு பணம் தர வேண்டிய நபர்களிடம் வரவேண்டிய தொகையை பெற்றுக்கொண்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்வதாக காவல் துறையினரிடம் செல்லமுத்து கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து தம்பதியரின் பதிலைக் கேட்ட அப்பகுதி மக்கள், அங்கிருந்து களைந்துசென்றனர். மேலும், வெளியூர் செல்லும்போது காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என தம்பதிக்கு காவல் துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர்.