தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்கு உள்ளான ஈரோட்டில் கிருமி நாசினி தெளித்தும் கை கழுவதற்கு தேவையான குடிநீர் விநியோகமும் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது கோடை காலம் நிலவியபோதிலும் அனைத்து தேவைகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.
இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89 அடியாகவும், நீர் இருப்பு 21.10 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 466 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 3100 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு இதேநாளில் நீர் இருப்பு 9.2 டிஎம்சி ஆக இருந்த நிலையில் நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் நீர் இருப்பை பொறுத்த வரையில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 11 டிஎம்சி தண்ணீர் அதிகமாக இருப்பு உள்ளது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி வரும் நாட்களில் எச்சரிக்கை மிக அவசியம் -ஆர்.பி.உதயகுமார்