கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை வாய்ப்பிழந்த நரிக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் சாலையோரம் வசிப்போர்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு கோபிசெட்டிபாளையம் தனியார் மண்டபத்தில் 55 நாள்களாக சாப்பாடு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கி, அவரவர் இருப்பிடங்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தார். பயனாளிகள் நன்றி சொல்லும் விதமாக ஆடி, பாடி அசத்தினர்.
அதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் வெளியூர் மாணவருடன் ஒருவர் வரவும், அவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் கரோனா தொற்று உள்ள இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும். அங்கு பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ஒவ்வொரு தனியார் பள்ளியில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். குறிப்பாக, தவிர்க்கமுடியாத சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத, மாணவர்களுக்கு மறுதேர்வு வைப்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும். தேவைப்பட்டால் மறு தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மலைப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது!