தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்து மைசூரு, பெங்களூரு, ஹாசன் போன்ற இடங்களுக்கு செல்ல சத்தியமங்கலத்திலிருந்து தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சத்தியமங்கத்திலிருந்து மைசூருக்கு 7 பேருந்துகள் கொள்ளேகால் பகுதிக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் 8 மாதங்களாக தமிழ்நாடு, கர்நாடக இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா இடையே இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்து வந்தது.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு மாநிலத்தில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தற்காலிகமாக பேருந்துகள் இரு மாநிலங்களிடையே இயக்கலாம் என்ற அரசின் உத்தரவையடுத்து இன்று சத்தியமங்கம் பணிமனையிலிருந்து மைசூருக்கு பேருந்து இயக்கப்பட்டது.
பயணிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பயணித்தனர். நீண்ட நாள்களுக்கு பின் மைசூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பயணிகள் வரவேற்பை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழ்நாடு போக்குவரத்து கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.