மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி ஈரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சியின் மாவட்டத் தலைமையக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் கரோனா நோய் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்த கட்சியின் உறுப்பினர்களை பாராட்டி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், '' சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து வருகிற டிசம்பர் இறுதி வாரத்தில் கூடவுள்ள கட்சியின் தலைமைக் குழுவில் முடிவெடுக்கப்படும். 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்திட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், மத்திய புலனாய்வுத் துறை அனுமதி வழங்கியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அவர்களது விடுதலையில் ஆளுநர் கள்ளமெளனம் காட்டுவது அநீதியானது. மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து முதலமைச்சர் 7 தமிழர்களின் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும்.
தமிழ்நாடு சமூகநீதியின் தாயகம், கூட்டாட்சித் தத்துவத்தின் பிறப்பிடம் இங்கு வடமாநிலத்தின் அரசியலை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி என்பது அறிவித்துள்ளது.
பாஜகவின் கூட்டணியில் இருந்த கட்சிகள் என்ன நிலைமையில் தற்போது இருக்கிறது என்பதை நாடறியும். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்பதை உணரும்'' என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா' - உதயநிதி ஸ்டாலின்